Saturday, October 24, 2009

மாவீரர் தினத்தில் வருகிறார் பிரபாகரன்



பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகி விட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவி யிருக்கும் முக்கியஸ்தர்கள், 'அண்ணன் மிக பத்திரமாக இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!' என உறுதியாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பிரபாகரனின் சம காலத் தளபதிகள் என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்பு களையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

முப்பது வருடப் போராட்ட காலத் தில் அடுத்து என்ன நடக்கும்? என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக் காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசி வரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!
அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோசித்த தலைவர், ''நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பெரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப்பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம். அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!'' என்று சொல்லி இருக்கிறார்.

அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சி குடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக் கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத மிகப் பெரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார்.
கடைசி வரை களத்தில் நின்ற கரிகாலன்!
மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் தலைவர். இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப் போனார்கள்.
ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வ பத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறினார்.
களத்தில் சார்லஸ் !
தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளி வாய்க்காலில் தங்கவைத்திருந்தார். முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசி நேர நெருக்கடிகள் மிகுதியானபோது புலித் தளபதிகள் மக்களிடம், ''நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய் விடுங்கள். ரசாயன குண்டுகளை வீசி மொத்தமாக அழிக்கப் போகிறார்கள்!''’என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், ''மண்ணோடு மண்ணா னாலும் நாங்கள் இராணுவக் கட்டுப் பாட்டுக்குப் போகமாட்டோம்'' என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற் புறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் இராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத் துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக் கும் மேலான போராளிகள் இறந்து போனார்கள்.
கடைசி நாளில்:
அடுத்தபடியாக மக்கள் மீது இராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த் தர்களை வீழ்த்திவிட்டது!’- என்று நிறுத்தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். மக்களையும் காயம் பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமா தானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை. அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன்.
அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராச பக்சேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். ''ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் இராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங் கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்''’என்று ராசபக்சே சொல்லி இருக்கிறார். தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.
சித்திரவதைக்குள்ளான நடேசன்
அவர்களும் ராசபக்சேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர் சிங்கள ராணுவத் தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடிபிடித்தபடி போயிருக்கிறார்கள்.
ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த இராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டார்கள். நடேசனை கொடூரமாக சித்ரவதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.
அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற இராணுவத்தினர், காயம்பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக் கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க வாய்ப்பில்லை.
அந்த உடல்:
ஈழத்தையே முழுவதுமாக அழித்த இராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது.
அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது இராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல், பெல்ட் எப்படிப் பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல இராணுவம் காட்டுகிறது.

மாவீரர் தினத்தில் வருவார் !!!
இராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்கவிருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27ஆம் தேதி - வீரவணக்க’தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலைவருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்! - என்கிறார்கள் உறுதி குறையாமல்.


நன்றி:தென் செய்தி http://www.thenseide.com




Friday, October 23, 2009

போர் குற்றம்: அறிக்கை

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான மோதலின் இறுதி மாதங்களில் இடம் பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட உரிமை மீறல் அல்லது மனிதாயத்திற்கெதிரான குற்றங்களும் அது தொடர்பான தீங்குகளும் இடம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் அமெரிக்க காங்கிரஸிடம் கையளித்துள்ளது என இலங்கையில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் தூதரகம் விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது 

உலக தமிழ் செம்மொழி மாநாடு: பாமக பங்கேற்க முடிவு



கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பாமகவும் பங்கேற்கும் என்று கூறி முதல்வர் கருணாநிதிக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்,
2010-ம் ஆண்டு ஜுன் மாதம் 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் கோவை மாநகரில் நடைபெற உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்றும், மாநாட்டிற்கென அமைக்கப்பட உள்ள குழுக்களில் பா.ம.க. சார்பாக பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என்றும் கேட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளீர்கள்.
மாநாட்டையொட்டி அமைக்கப்படும் குழுக்களின் விவரங்களை தெரிந்து அதில், பா.ம.க. சார்பில் இடம்பெறும் பிரதிநிதியை உரிய நேரத்தில் அறிவிக்கிறோம். கோவையில் நடைபெறும் மாநாடு தமிழ் மொழியின் ஆக்கம், வளர்ச்சி தவிர அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை என்று நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பை வரவேற்கிறேன். மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற உங்களது அழைப்புக்கு மீண்டும் நன்றி கூறி முடிக்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ் .

Wednesday, October 21, 2009

எல்லாருமே மலையாளிகள்தானா? ராமதாஸ் கேள்வி.


முல்லை பெரியாறு அணை விசயத்தில் சட்டத்தை மதிக்காமலும், நீதிக்கு தலைவணங்காமலும் கேரள அரசு நடந்து கொள்வதையும், அதனை தமிழகம் தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்படுவதையும் பார்க்கும் போது, இப்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற மாநிலம் எது? என்ற சந்தேகத்திற்கு மக்கள் ஆட்பட நேரிடும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி எச்சரித்திருக்கிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் நடைபெற்று வந்த காரியங்களைப் பார்த்து, என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து சொல்லி வந்த கருத்தை இப்பொழுது முதல்-அமைச்சரும் உணரத்தொடங்கியிருக்கிறார் என்பதையே அவரது இந்தக் குற்றச்சாட்டு எடுத்துக்காட்டுகிறது. இதில் நமக்கு சந்தேகமே வேண்டாம். இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது கேரளா தான்.

30 மாநிலங்களையும், 3 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட மத்திய அரசின் செயலகங்களா? அல்லது திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகமா? என்று பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு, இன்றைக்கு டெல்லியில் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் நிரம்பி வழிகிறார்கள்.

இந்தியாவா? அல்லது கேரள தேசமா? என்று எண்ணும் அளவுக்கு மலையாள மொழி பேசுகிற கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் மத்திய ஆட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

அரசியல் சட்டத்தின்படி நாட்டின் முதல்குடிமகனாக விளங்குபவர் குடியரசு தலைவர் இப்போது குடியரசு தலைவராக இருக்கும் பிரதீபாபட்டிலுக்கு செயலாளராக இருப்பவர் கிறிஷ்டி பெர்னாண்டஸ், பதவியிலிருந்து ஓய்வு பெறும் வயதை தாண்டிய இவருக்கு 4 ஆண்டுகள் பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டு பிரதீபாபட்டில் பதவியில் இருக்கும் வரையில், இவரும் செயலாளராக பதவியில் நீடிப்பார் என்ற நிலமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.

குடியரசு தலைவருக்கு அடுத்ததாக ஆட்சி தலைவராக இருப்பவர் பிரதமர். பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச்செயலாளராக இருப்பவர் டி.கே. நாயர். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று விளக்கத் தேவையில்லை. பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும், ஆட்சியை வழி நடத்திச் செல்பவராகவும் விளங்கி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செயலாளராக இருப்பவர் வின்சென்ட் ஜார்ஜ். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.

மாநிலங்களில் எப்படி தலைமைச் செயலாளர் பதவி இருக்கிறதோ, அதைப் போன்று மத்தியில் இருப்பது அமைச்சரவை செயலாளர் பதவி. இப்போது அமைச்சரவை செயலாளராக இருப்பவர் கே.எம். சந்திரசேகர், இவருக்கு அடுத்தபடியாக உள்துறை செயலாளராக இருப்பவர் சி.கே. பிள்ளை, செல்வாக்கும், அதிகாரமும் மிக்க இவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள்.

வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாமேனன் ராவ், தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் பி.கே.தாமஸ், விவசாயம் மற்றும் கூட்டுறவு துறை செயலாளர் நந்தகுமார், சிவில் விமானப்போக்குவரத்து துறை செயலாளர் மாதவன் நம்பியார், செய்தி ஒலிபரப்பு துறை செயலாளர் ரகுமேனன், நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் ராமச்சந்திரன், ஜவுளி துறை செயலாளர் ரீட்டாமேனன், கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் கங்காதரன், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், சட்டத்துறை செயலாளர் விசுவநாதன் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழி பேசுகிற அதிகாரிகள்.

எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் எம்.கே.நாராயணன் நாயர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் மாதவன் நாயர் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத்துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.

தமிழ்நாட்டிலிருந்தும் 2 அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு போயிருக்கிறார்கள். அந்த இருவருமே கேரளாவை சொந்த மாநிலமாகக் கொண்ட வர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு அதிகாரி இப்போது மத்திய அரசில் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது.

மத்தியில் இணை அமைச்சராக இருக்கும் ஒருவர் மிகத் துணிச்சலாக தமிழக அரசையும், தமிழக முதல்-அமைச்சரையும் மதிக்காமல், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரளாவிற்கு அனுமதி அளிக்கிறார் என்றால், அந்தத் துணிச்சல் அவருக்கு எப்படி வந்தது? மத்தியில் ஆளுகின்ற கூட்டணி ஆட்சியில் முக்கியக் கூட்டணிக்கட்சி ஆட்சி நடத்துகின்ற தமிழகத்திற்கு பாதகமாகவும், எதிர்க்கட்சி ஆட்சி நடக்கிற கேரளத்திற்குச் சாதகமாகவும் முடிவெடுக்கும் துணிச்சலை அவருக்கு கொடுத்தது யார்? அவர் வெறும் பொம்மை தான். அவருக்கு சாவி கொடுத்து செயல்பட வைத்திருப்பவர்கள் யார்? என்பதை துணிந்து அறிவிக்க முதல்வர் முன்வர வேண்டும்.

மாநில நலனை காக்க மத்திய அரசுக்கு சவால் விட்டு வெற்றிக் கொடி நாட்டும், துணிவுமிக்கதாக தமிழகம் மாறினாலொழிய முல்லை பெரியாறு அணை பிரச்சினையிலும், இதர நதிநீர் பிரச்சினைகளில் நமது உரிமையை பாதுகாத்திட முடியாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Monday, October 19, 2009

இலஙகை அரசின் மறுப்பும் அமெரிக்க அறிஞர்களின் ஆதாரமும்

இலங்கை அரசு இளைஞர்களை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் மறுப்பு தெரிவித்த போதும் அந்த வீடியோ படத்தில் உண்மை தன்மை இருப்பது அமெரிக்க அறிஞர்களின் ஆராய்சியில் தெரிய வந்துள்ளது.



இலங்கை தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி, சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுக்கொள்ளும் நேரடிக்காட்சி ஒன்றினை, இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் சங்கம், பொதுமக்கள் பார்வைக்கு அண்மையில் வெளியிட்டிருந்தது.
இதனை Channel 4 ஊடகமும், தனது செய்தியின் ஊடாக வெளிக்கொணர்ந்து, சர்வதேசத்தின் பார்வைக்கு எடுத்து சென்றிருந்தது.

எனினும் இவ் ஒளிப்படக்காட்சிகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பாலித கோஹன, இது ஒரு புனையப்பட்ட வீடியோ பதிவு எனவும், இதனை வெளியிட்ட தரப்பினரின் பெயரை தான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இக்காணொளி காட்சிகள் சம்பவம் தொடர்பில், இந்திய மத்திய அரசும், கருத்து தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எம்.எஸ்.கிருஷ்ணா, பி.பி.சி செய்திச்சேவைக்கு அளித்த பேட்டி ஒன்றில், 'இந்த விடயம் தொடர்பாக தாம் அதிக கரிசணை செலுத்து வருகிறார் என்றும், சம்பந்தப்பட்ட வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிடமிருந்து இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அறிஞர்கள் அராயச்சி:
இலங்கை தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில், சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படும் காணொளிக்காட்சிகளில், எவ்வித திரிபுகளும் இல்லை, அவை உண்மையானவை என அமெரிக்க
புலனாய்வு வல்லுனர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
பிரித்தானியாவின் 'சேனல் '4 ஊடகத்தின் மூலம் உலக வெளிச்சத்திற்கு வந்த இக்காணொளிக்காட்சிகள், சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்ற கொடூரத்திற்கு சிறந்த உதாரணமாக சர்வதேசத்திற்கு முன்வைக்கப்பட்ட போதும், இது போலியாக தயாரிக்கப்பட்டதொன்றென, சிறிலங்கா அரசு திட்டவட்டமாக மறுத்திருந்தது. தனது சார்பில் ஒரு குழுவொன்றை நியமித்து, இவ்வீடியோ காட்சிகள் சித்தரிக்கப்பட்டதொன்றெனவும், அறிக்கையும் வெளியிட்டது.

எனினும், ஐ.நா முதற்கொண்டு மனித உரிமை அமைப்புக்கள் வரை, இவ் அறிக்கையின் உண்மைத்தன்மை பற்றி கேள்வி எழுப்பின. அரசு நியமித்த குழுவில் இடம்பெற்றவர்கள் பலர், சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் உறுப்பினர்கள் என்பதுடன் அரசுக்கு ஆதரவாக செயற்படுவர்களாக இருப்பதால், அவர்கள் சுயாதீனமாக ஆராய்ந்திருக்க வாய்ப்பில்லை எனவும், அவை தெரிவித்தன.

இந்நிலையில், அமெரிக்க வல்லுனர்கள் ஒன்றினைந்து இவ்வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மை பற்றி ஆராய முடிவெடுத்தனர். அதன் பிரகாரம், தமது முதற்கட்ட அறிக்கையினை அவர்கள் வெளியிட்ட்டுள்ளனர்.

அவற்றில் 10 விடயங்கள், இவ்வீடியோ காட்சிகள் உண்மையானவை என்பதனை உறுதிப்படுத்தியுள்ளன.

  • வீடியோ அல்லது ஓடியோ பகுதியில் எதுவும் திருத்தியமைக்கப்படவில்லை
  • சுடப்பட்ட நபரைச் சூழ்ந்துள்ள இரத்தம் முதலில் சுடப்பட்ட வெள்ளைச் சட்டை வாலிபரைச் சூழ்ந்துள்ள இரத்தத்திலும் பார்க்க கூடிய நிறமாக உள்ளது.
  • குருதி ஒட்சிசனேற்றம் அடைந்தால் அதன் நிறம் மாறும். எனவே இரண்டாவது நபரின் இரத்தம் கூடுதல் சிவப்பாக உள்ளமை அவர் பின்பு சுடப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.
  • இரு சூட்டுச் சம்பவங்களின் சத்தம் வருவதிலும் உள்ள தாமதம் ஒத்ததாக உள்ளது.
  • முன்பே சுடப்பட்டவரின் காலானது அடுத்த சூட்டுக்கு மெதுவாக உயர்ந்து பின்னர் பழைய நிலைக்கே செல்வது போல உள்ளமை அவர் முதலில் இறக்காமல் இருந்ததைக் காட்டுகிறது.
இக்குழுவினரின் இறுதி அறிக்கை நவம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ளது. இவ்வீடியோ காட்சிகள் உண்மையென, சுயாதீனமாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்படுமாயின், அவை சிறிலங்கா அரசினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த மேலும் ஆதாரமாக அமையும் என நம்பப்படுகிறது.


ஈழத் தமிழர்களை மீட்க பிரசார பயணம்: ராமதாஸ், வைகோ, பாண்டியன், நெடுமாறன் பங்கேற்ப்பு


இலங்கையில் முள்வேலி முகாம்களில் இராணுவக் காவலில் சிறை வைக்கப்பட்டு உணவு, குடிநீர், மருந்து, சுகாதார வசதிகள் இல்லாமல் வதைக் கப்படும் ஈழத்தமிழர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வை தமிழக மக்களிடம் ஏற்படுத்துவதற்காக பரப்புரைப் பயணம் நடத்துவது என இலங் கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் உயர்நிலைக் குழு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் நான்கு திசைகளிலிருந்தும் அக்டோபர் 27ந் தேதி தொடங்கும் இப்பயணம் திருச்சியில் அக்டோபர் 29ஆம் தேதி நிறைவடைகிறது. சென்னையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தலைமையில் தொடங்கும் பயணம் காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் வழியாகச் சென்று திருச்சியை அடைகிறது.
இராமேசுவரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில் தொடங்கும் பயணம் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக் கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் வழியாக திருச்சியை அடைகிறது.
குமரி முனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர்கள் தலைமையில் தொடங்கும் பயணம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் வழியாக திருச்சியை அடைகிறது.
உதக மண்டலத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப் பாளர் பழ. நெடுமாறன் தலைமையில் தொடங்கும் பயணம் கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ் ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களின் வழியாக திருச்சியை அடைகிறது.
வழிநெடுக இருக்கும் ஊர்களில் மக்களிடையே பரப்புரைப் பயணம் செய்தவாறு செல்லும் இக்குழுவினர் இறுதியாக அக்டோபர் 29ஆம் தேதி யன்று மாலை திருச்சியில் நடைபெற இருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் இணைந்து பேசுகிறார்கள்.பரப்புரை பயணக் குழுவினரின் விரிவான பயணத் திட்டம் பின்னர் அறிவிக்கப்படும். வழிநெடுக உள்ள ஊர்களில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள், தமிழ் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடித் திட்டமிட்டு இப்பயணத்தை வெற்றிகரமாக நடத்த உதவும்படி வேண்டிக்கொள்ளப் படுகிறார்கள்.

தீர்மானங்கள்இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம் 10-09-2009 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் மரு. இராமதாசு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் நல்லகண்ணு, துணைச் செயலாளர் மகேந்திரன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தனிச்சிறைகளில் அடைக்கப்பட்டு பல ஆண்டு காலமாக வாடிவரும் ஈழத்தமிழ் அகதிகளில் எத்தகைய குற்றச்சாட்டோ வழக்குகளோ இல்லாதவர்களையும், நீதிமன்றங்களால் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களையும், பிணையிலிருந்து விடுதலை பெற்றவர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்துகிறது.மற்றவர்கள் மீதுள்ள வழக்குகளை விரைவில் விசாரித்து முடிவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இக்கூட்டம் வற்புறுத்துகிறது.
2. இலங்கையில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களின் அவல நிலையைக் கண்டறிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அனுப்ப வேண்டும் என பல்வேறு கட்சியினரும் வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் காங்கிரசுக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் கொண்ட குழுவை அனுப்ப இந்திய - தமிழக அரசுகள் முடிவு செய்திருப்பது நாடாளுமன்ற சனநாயக மரபுகளுக்கு எதிரானதாகும். நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அனுப்பினால் ஒழிய உண்மைகளைக் கண்டறிய முடியாது. காங்கிரசுக் கூட்டணியைச் சேர்ந்தவர்களை மட்டுமே கொண்ட ஒரு குழுவை அனுப்பியது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவிக்கிறது.


Sunday, October 18, 2009

ராஜபக்சேவின் கைப்பாவை கருணாநிதி: விஜய்காந்த்

"ராஜபக்சேவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் தூண்டுதலின் பேரில்தான் எம்.பிக்கள் குழு அனுப்பப்பட்டது என்ற செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்" என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இலங்கை அதிபர் ராஜபக்சே கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே அங்கு எம்.பிக்கள் குழு அனுப்பப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

4 மாதங்களில் 51,000 தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஹிட்லருக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் இனப் படுகொலை செய்த ராஜபக்சேவை சர்வதேச போர் குற்றவாளியாக விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஐ.நா. மனித உரிமைக் கமிஷன் முன் இன்னும் இப் பிரச்சினை உள்ளது. ராஜபக்சே சர்வதேச போர்க் குற்றவாளியாகக் கைது செய்யப்படும் சூழ்நிலை உள்ளது.

எங்கே தன்னை விசாரித்துச் சிறையில் அடைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் ராஜபக்சே நரித் தந்திரத்தோடு தமிழக முதல்வர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதி, தமிழ்நாட்டிலிருந்து ஒரு தூதுக் குழுவை அனுப்பச் சொல்லியுள்ளார். அவர்கள் வந்து பார்த்து திருப்தி அடைந்துவிட்டால் அதை வைத்து, தான் மனிதகுலப் படுகொலையாளி என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் ராஜபக்சேவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் தூண்டுதலின் பேரில்தான் எம்.பிக்கள் குழு அனுப்பப்பட்டது என்ற செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த எம்.பிக்கள் குழு தந்த அறிக்கையில் உள்ள விவரங்களைக் காட்டிலும் அங்கே உள்ள தமிழர்கள் படும் துன்பங்களை ஏற்கெனவே இங்குள்ள பத்திரிகைகள் அதிகமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளன. நானும் எனது அறிக்கையில் ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளேன். அப்படியிருக்க, இந்தக் குழுவை உண்மை அறிய அனுப்பியதாகச் சொல்வது தமிழர்களை ஏமாற்றுவதாகும்.

கண்ணி வெடி அகற்றம் என்று சிங்கள இனவெறி அரசு சொல்வது வேண்டுமென்றே விடுதலைப் புலிகள் என்று அவர்கள் சந்தேகிப்பவர்களைக் கொல்வதற்குத் தான். முகாமிலேயே மெல்ல, மெல்ல சித்ரவதைப்பட்டுச் சாவதைவிட, தங்கள் இடம் நோக்கிச் செல்கையில் கண்ணிவெடியில் சாவதே மேல் என்று தான் தமிழர்கள் கருதுகின்றனர். அதனால் தான் அனைவரும் எம்.பிக்கள் குழுவிடம் கண்ணீர் மல்கக் கதறிக் கேட்டுள்ளனர்.

உண்மை என்னவென்றால், 3 லட்சம் தமிழர்களிலும் விடுதலைப் புலிகள் மறைந்துள்ளனரா என்று ஒவ்வொருவராக கேள்வி கேட்டு சிங்கள இனவெறி ராணுவம் சித்ரவதை செய்து வருகிறது. இதுவரை 1.57 லட்சம் பேரை கிரிமினல்களைப் போல விசாரித்து அடையாள அட்டை வழங்கியுள்ளது. வெறும் 15,000 பேர் தான் சொந்த இடங்களுக்கு, அனுப்பப்பட்டதாக ஐ.நா. சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் எங்குபோய் சேர்ந்தார்கள் என்பது எமனுக்குத் தான் வெளிச்சம்.

ராஜபக்சே தமிழர்களுக்காகப் பரிந்து பேசுவது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதைப் போலத்தான்."

இவ்வாறு விஜய்காந்த் கூறியுள்ளார்.


அன்பு வாசகர்களுக்கு

விரைவி புதிய கருத்துக்களுடன் உங்களை சந்திக்கிறேன்